மனித உரிமைகள் பேரவையில் தமிழ் இன அழிப்புக்கான நீதி நீர்த்துப் போகிறதா?: பிளவுபட்டுக்கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள்

OruvanOruvan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல விளக்கமளிப்பும் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது.

ஜெனிவா நகர்வுகள குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் இலங்கை அடைந்துள்ள இலக்குகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும் அலி சப்ரி கூறியிருந்தார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் குறித்து மார்ச் மாதம் 4 ஆம் திகதி கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

ரணில் ஆற்றிய உரை

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார்.

OruvanOruvan

இதன்போது, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, இலங்கையில் வாழும் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி இலங்கையை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும் எனக் கூறியிருந்தார்.

என்றாலும், இலங்கை இராணுவம் மீதான போர்க்குற்ற விவகாரங்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கான நீதியை வழங்கல், காணாமல்போனோர் விவகாரம் உட்பட இலங்கை அரசியலில் பேசுபொருளாதாக உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்கள் குறித்து அவர் எவ்வித கருத்துகளை தெரிவித்திருக்கவில்லை.

இலங்கையின் மனித உரிமைகள் பற்றி முன்னெற்றங்கள் தொடர்பில் ஐ.நா எழுப்பியிருந்த கேள்விகளுக்கும் பதில் அளிப்பதை அவர் தவிர்த்திருந்தார்.

நீர்த்துப்போகுமா தமிழ் இனப்படுகொலைக்கான நீதி

இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொகைக்கான நீதியை வழங்கும் செயல்பாடு நீர்த்துப்போகும் நிலைக்கு வந்துள்ளது.

ஐ.நாவில் 2010ஆம் ஆண்டுமுதல் 2015ஆம் ஆண்டுவரை கொடுக்கப்பட்ட அழுத்தம் தற்போது குறைந்துள்ளன.

2015ஆம் ஆண்டில் ரணில் - மைத்திரி தலைமையில் அமைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிவிவார அமைச்சராக பணியாற்றிய மங்கள சமரவீர, இலங்கை மீதான ஜெனிவாவின் அழுத்தங்களை குறைத்துக்கொள்ள கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.

மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 40/1 கீழான யோசனைகளுக்கு இலங்கை இணை அனுசரணையை வழங்கியது. அது மங்கள சமரவீரவின் முயற்சியிலாகும்.

இதன் பின்னரான காலப்பகுதியில் ஜெனிவாவில் இலங்கை மீதான அழுத்தம் மெல்ல மெல்ல குறைந்துவந்தது. தற்போது இலங்கை விவகாரம் ஒரு குறுகிய பேசுபொருளாக மாத்திரமே மனித உரிமைகள் பேரவையில் உள்ளது.

தமிழ் சமூகத்தின் ஒற்றுமை அவசியம்

இந்த விவகாரத்தை நீர்த்துப்போகாமல் வைத்திருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் கடமையாகும். புலம்பெயர் தமிழர்களின் கடுமையான அழுத்தங்களும் இதற்கு அவசியமாகும். அத்துடன், ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகள் எழுந்துள்ளன.

இலங்கைத் தீவில் தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் ஒருமித்த கருத்தில்லாமையும் தமிழ் இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ளும் செயல்பாடு நீர்த்துப்போவதற்கான காரணியாக மாறி வருகிறது.

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி மறுக்கப்படும் நிலையில்

அண்மையில் நடைபெற்ற தலைவர் தெரிவு மற்றும் பொதுச் சபைக் கூட்டத்தின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள்ளும் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

OruvanOruvan

தமிழர் அரசியலில் ஓரளவு வலுவாக சக்தியாகவும் தென்னிலங்கையுடன் பேரம் பேசும் சக்தியாகவும் தமிழரசுக் கட்சியும் அது தலைமையிலான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே கடந்த ஒரு தசாப்தமாக இருந்து வந்தது.

ஆனால், இன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதறிப்போயுள்ளன. கூட்டமைப்பும் பிளவுபட்டுவிட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்தவொரு கட்சியுடனும் ஒத்துபோகாத நிலைப்பாட்டில் பயணிக்கிறது.

வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி, செயிழந்த ஒன்றாக உள்ளது.

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பது தமிழ் இனப்படுகொலைக்கான நீதி மறுக்கப்படுவதற்கான சூழலை சர்வதேச அரங்கில் உருவாக்கிவடும் என தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளனர்.